காடு:

 


முன்னுரை:

இயற்கை நமக்களித்த அற்புதமான படைப்பு தான் "காடு". மரங்கள் அடர்ந்த நிலப்பகுதிகளைக் "காடுகள்" என்று நாம் அழைக்கிறோம். இது தமிழில் "வனம்", "கானகம்", "அடவி", "புரவி" என்று பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது. காடுகள் செழிப்பாக இருந்தால்தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும். காடுகள் இல்லையேல் உயிர்களே இல்லை. காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த திருவள்ளுவரும்:

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
 காடு முடையது அரண்"

எனப் பாடியுள்ளார். இப்புவியின் நிலப்பரப்பில் 30 விழுக்காடு காடுகளே உள்ளன. காடுகள் இயற்கையாகவே உருவாகின்றன. பறவைகளும், விலங்குகளும் தாவரங்கள் தரும் பழங்களை உண்டு அவற்றின் விதைகளை எச்சமாக ஆங்காங்கே போடுவதால் காடுகள் பரவுகின்றன. இதன் முக்கியத்துவம் கருதியே சங்க காலத்தில் காடுகளும் காடு சார்ந்த பகுதிகளும் "முல்லை" என வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டன.

காடுகளின் முக்கியத்துவம்:

மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமே காடுகள்தான். அவை நமக்கு சுவாசிக்க நல்ல காற்றை தருகின்றன. வெயிலுக்கு ஒதுங்க நிழலைத் தருகின்றன. பல உயிரினங்களின் வாழிடமே மரங்கள் தான். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் என நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை மரங்களைச் சார்ந்தே இருக்கிறோம். எனவே மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது - என்பதே மறுக்க முடியாத உண்மை!

காடுகளின் வகைகள்:

காடுகள் புவியியல் ரீதியாக அயனமழைக்காடுகள், சவன்னாக்கள், புல்வெளிகள் மற்றும் ஊசியிலைக் காடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அயனமழைக்காடுகள் என்றழைக்கப்படும் வெப்பமண்டலக் காடுகள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான்-நிகோபார் தீவுகளில் காணப்படுகின்றன.

காடுகளின் பயன்கள்:

காடுகள் பூமியின் வெப்பத்தை குறைக்கின்றன. காடுகளின் குளிர்ச்சித் தன்மையாலேயே மழை பொழிகிறது. காடுகள் நீர்வளத்தைப் பாதுகாக்கின்றன. காற்று மாசைக் குறைக்கின்றன. மண்சரிவு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களைக் காடுகள் தவிர்க்கின்றன. மரங்களிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மனிதனுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவைகளாகின்றன. காடுகள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வழங்குகின்றன. பூமியின் தட்ப வெப்ப நிலையைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

காடுகள் அழிப்பு:

நகரமயமாக்கல், நாட்டின் வளர்ச்சிப் பணிகள், மனிதனின் பேராசை போன்றவற்றின் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சுரங்கப் பணிகள், தொழிற்சாலை, விமான நிலையம், ரயில் இருப்புப் பாதைகள், அணைகள், பாலங்கள், பள்ளிகள், வீடுகள், சாலைகள், கல்லூரிகள், சுற்றுலா விடுதிகள் அமைத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் காடுகள் வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன.

காடுகளைக் காப்போம்:

காடுகள் நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளை அளிக்கின்றன. அப்படிப்பட்ட காடுகளை அழிப்பது நம்மை நாமே அழிப்பதற்குச் சமமாகும். "தன்வினை தன்னைச் சுடும்" என்பதை நாம் மறந்து விடக்கூடாது. காடுகளின் பயனறிந்தே நம் அரசு "வனத்துறை பாதுகாப்பு" என்ற ஒரு அமைச்சகத்தையே நியமித்துள்ளது. உலக வனத்துறைச் சட்டப்படி "ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும்" என்பது விதி. ஆனால் அது ஏட்டளவிலேயே தொடர்கிறது. இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றிக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான், மனிதகுலம் உயிர்பிழைக்கும்.

முடிவுரை:

காடுகளே இவ்வுலகின் சுவாசம். காடுகளைப் பெருமளவில் நாம் அழித்து வருவதால் பூமியின் இயற்கை வளம் அழிந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1971ம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் "உலகக் காடுகள் தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது. காடுகள் அழிக்கப்பட்டால் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு, உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழல்கள் மாற்றமடைந்து, மனிதனும் பிறவுயிர்களும் இவ்வுலகில் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும். எனவே நாட்டின் வளம் காக்க, காட்டின் வளம் காப்போம். மரங்கள் வளர்ப்போம்!!! புவியைக் காப்போம்!!!

Comments