முன்னுரை:
இயற்கை என்ற சொல்லை ஆங்கிலத்தில் 'நேச்சர்' என்பர். இச்சொல்லானது 'நேட்சுரா' என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் இருந்து தருவிக்கப்பட்டது. இதன் பொருள் பிறவிக்குணம் ஆகும். மனிதனால் உருவாக்கப்பட்டவை செயற்கை என்றால் தானாக உருவானவை இயற்கை ஆகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களும் உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளின் தொகுதியும் இயற்கையே. இயற்கையானது கடவுளின் விலைமதிப்பில்லா பரிசாகும். எனவே இயற்கையைக் காப்போம். இனிதே வாழ்வோம்.
இயற்கையின் முக்கியத்துவம்:
இயற்கை நமக்கு உண்ண உணவு, சுவாசிக்க காற்று, வாழ இருப்பிடம், உடுத்த உடைகள், அருந்த நீர், மருந்துகள் என கருவறை முதல் கல்லறை வரை அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. உயிர்களின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் இயற்கையைச் சார்ந்தே அமைந்துள்ளது. எனவே தான் நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களையும் கடவுளாக வழிபட்டனர்.கோவில்களில் மரம் வளர்த்து ஸ்தல விருட்சமென வணங்கினர். "மரங்களே மழையின் விதைகள்" எனப் புரிந்தவர்கள் நம் முன்னோர். எனவே இயற்கையோடு இணக்கமாய் வாழ்தலே மனிதனின் கடமையாகும். அதோடு அடுத்த சந்ததியினரிடம் இயற்கையைப் பாதுகாத்துக் கையளிப்பது இன்றியமையாததாகும்.
இயற்கை மாசும் சீற்றமும்:
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை, வாகனப் புகை போன்றவை காற்றை மாசுபடுத்துகின்றன. நெகிழி பயன்பாடு மண்ணை சீர்குலைக்கிறது. கழிவுகள் நீரை வீணாக்குகின்றன. காடுகளிலுள்ள அடர்ந்த மரங்களை வெட்டுவதும், நிலத்தடி நீரை உறிஞ்சுவதும், இயற்கையைக் கெடுத்து சுனாமி, சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் போன்ற சீற்றங்களை உருவாக்குகின்றன. இயற்கையைச் சீரழித்தால் அதன் பின்விளைவுகளை எவ்வுயிராலும் தாங்க முடியாது. இப்பேருண்மையைச் சற்றும் புரிந்து கொள்ளாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவது மூடத்தனம். பல உயிர்களை காவு கொண்ட இயற்கைப் பேரழிவிற்கு உதாரணமாக 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியைக் குறிப்பிடலாம்.
இயற்கை உறவில் விரிசல்:
மனிதனின் நாகரீக வளர்ச்சியாலும், கலாசார மாற்றத்தாலும், பொருளாதார தேவையின் பொருட்டும் இயற்கையுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. அறிவியல் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம். இயற்கையுடன் இயைந்து வாழாத மனிதர்களால் பிற உயிரினங்களும் பாதிப்படைகின்றன. சுயநலமிக்க மனிதர்களே இயற்கையைப் பேணாமல் பாழ்படுத்துகின்றனர்.
பாதுகாப்புச் சட்டம்:
இயற்கையைப் பாதுகாக்க 1980-ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் பல்வேறு சட்டதிட்டங்களை இயற்றி செயல்பட்டு வருகிறது. ஜூலை மாதம் 28-ஆம் தேதி உலக பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது", என்ற பாடலுக்கேற்ப என்ன தான் சட்டங்கள் போட்டாலும் மனிதனே மனது வைத்தால் தான் இயற்கை காக்கப்படும்.
முடிவுரை:
"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்"
என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப நம் உள்ளும், புறமும் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது. சுற்றுச்சூழல் தூய்மையும் மிகவும் முக்கியம். மனிதனும் இயற்கையும் சீரான இடைவெளியில் இரயில் தண்டவாளம் போல இணைந்திருப்பதே இயற்கைக்கும் பாதுகாப்பு. அதோடு, மனிதத்தேவைகளும் பூர்த்தியாகும் உற்ற வழி. இயற்கை சூழலில் மனிதன் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையைக் காண சுற்றுலா செல்லும் நிலைமையை எதிர்நோக்கியுள்ளோம். இன்னும் சில காலம் இதே நிலை தொடர்ந்தால் இயற்கையோடு மனித இனமும் அழியும் அபாயம் உள்ளது. எனவே இயற்கையைத் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தி வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்போடு வைத்திருந்து நாமும் நலம் பெற்று வாழ்வோமாக!
Comments
Post a Comment