உள்ளூர் இருபது ஓவர் லீக் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் தரத்தினை உயர்த்துகிறதா?


IPL 2019 to be moved out of India to UAE due to general elections?

எனது கருத்துப்படி, உள்ளூர் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவினாலும், அதே சமயம் அப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் ஆட்டத்திறனை மேம்படுத்துகிறதா என்பது சந்தேகமே. பல விளையாட்டு நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு கிரிக்கெட் வீரரின் உண்மையான திறமை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளால் மட்டுமே வெளிப்படும். அத்தகைய டெஸ்ட் போட்டிகள், ஒரு வீரரின் விளையாட்டுத் திறன், மன உறுதி, பொறுமை மற்றும் வெற்றி பெறுவதற்கான உத்வேகத்தை சோதிப்பதாய் அமையும். இவை அனைத்தும் வெறும் மூன்று மணி நேரம் நடைபெறும் ஒரு இருபது ஓவர் போட்டியின் மூலம் கண்டிப்பாக பெறவே முடியாது!

மேலும், சமீபகாலமாய் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் ஓரிரண்டு நாட்களில் முடிந்து போவதற்கான காரணம், இத்தகைய டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்களால் மற்ற கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முடியாததுதான். அதற்காக இருபது ஓவர் போட்டிகளால் பயன் ஏதும் இல்லை என முற்றிலுமாக சொல்லி விடவும் முடியாது. பரபரப்பான 20-ஓவர் போட்டிகளில் பங்கேற்பதால், அழுத்தமான தருணங்களை பதட்டப்படாமல் எதிர்கொள்ளும் ஆற்றலும், எத்தகைய கடினமான சூழலிலும் அணிக்கு வெற்றி தேடி தரும் நம்பிக்கையும் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், பிரச்சினை என்னவென்றால் இத்தகைய இருபது ஓவர் போட்டிகளின் பின்புலத்தில் இருந்து வரும் வீரர்கள், அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும், பொறுமையற்றவர்களாக மாறி வருவதுமே ஆகும். இதனால் ஆட்டக்களத்தினுள் நுழைந்த உடன் பந்தினை அடித்து ஆட நினைத்து உடனடியாக ஆட்டமிழக்கின்றனர்!

வீரர்கள் தங்கள் இளம் வயதில் ஐ.பி.எல், டி.என்.பி.எல் போன்ற பணம் கொழிக்கும் லீக்குகளில் பங்கேற்று அதிக பணம் ஈட்டுவதால் விளையாட்டின் மீது கவனம் செலுத்த தவறுவது மற்றொமொரு கவலைக்குரிய விஷயமாகும். ஐ.பி.எல் போன்ற போட்டிகளின் மூலம் பிரபலம் அடைந்த வீரர்களை உடனடியாக தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்க பெரும் விளம்பர நிறுவனங்கள் ஈ போல் மொய்க்கத் தொடங்குகின்றன. அவர்களுடன் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான விளம்பர உடன்படிக்கைகளை ஏற்படுத்திப் பல கோடி ரூபாய்களை சம்பளமாய் பேசுகின்றன.

இவற்றைக் காணும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கிடைக்கும் போதே இத்தகைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்து அல்லும் பகலுமாய் தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்குகின்றனர். ஒரு காலக்கட்டத்தில் அவர்களுக்கு வேண்டிய பணம் கிடைத்தவுடன், மெல்ல அவர்கள் தங்களது விளையாட்டு பயிற்சிகளை தவிர்க்கத் தொடங்குகின்றனர். இதனால் அவர்களின் ஆட்டத்திறன் பாதிப்படைந்து மெல்ல விளையாட்டு அரங்கிலிருந்தே காணாமல் போகின்றனர். ஐ.பி.எல் போட்டிகளில் பட்டையை கிளப்பிய திறன் படைத்த பல இளம் வீரர்கள், இந்திய தேசிய அணியில் சரியாக விளையாட முடியாமல் போய் பின்னர் ஓரங்கட்டப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

எனவே, லீக் முறை இருபது ஓவர் போட்டிகளால் சிறந்த வீரர்களை அடையாளம் மட்டுமே காண முடியும். அதன் பின் ஒரு வீரர் ஆட்டத்தில் ஜொலிப்பதற்கும் தனது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் அவரது கடின உழைப்பே காரணம் என்பதே எனது கருத்தாகும்.


Facebook post:


நாம் ஒரு மிகவும் சுவாரசியமான விவாதத்தை இங்கு தொடங்க உள்ளோம். இக்காலக்கட்டத்தில் ஐ.பி.எல், டி.என்.பி.எல், கே.பி.எல் போன்ற மேலும் பல போட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால், இத்தகைய போட்டிகளில் ஒளிரும் வீரர்களால் பிற்காலத்தில் இந்திய தேசிய அணியில் தேர்வானபின் சிறப்பாக செயல்பட முடிவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவே நாங்கள் உள்நாட்டு இருபது ஓவர் லீக் போட்டிகள் வீரர்களின் விளையாட்டு தரத்தினை உயர்த்தவில்லை என்கிறோம். உங்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளதா? உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிட அழைக்கிறோம்.
மேலும் இது குறித்த எங்கள் கட்டுரையினைப் படிக்க இங்கு அழுத்தவும்.

#ஐபிஎல் #டிஎன்பிஎல் #கேபிஎல் #ஐசிஎல் #டி20 #வீரர்கள்செயலாற்றல் #விவாதம் #கிரிக்கெட்வீரர்களின்தரம்


Twitter copy:


நீங்கள் ஐபிஎல் போட்டிகளை ஆதரிக்கிறீர்களா இல்லையா? பலர் இப்போட்டிகளால் ஒட்டுமொத்த கிரிக்கெட் விளையாட்டின் தரமும் இதில் பங்கேற்கும் வீரர்களின் ஆட்டத்திறனும் தொடர்ந்து குறைந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்கள் கருத்துக்கள் இதோ


#ஐபிஎல் #கிரிக்கெட்வீரர்களின்தரம்

Comments