பன்னிரெண்டாம் பதிப்பில் அடியெடுத்து வைத்துள்ள ஐ.பி.எல்லும், கிரிக்கெட் அட்டவணையில் அதன் இடம் குறித்த கவலையும்
இந்தியன்
ப்ரீமியர் லீக், அது தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு முதலே கோடைகால
விளையாட்டுத் திருவிழாவாக ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம், இருபது
ஓவர் போட்டிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என கிரிக்கெட் ஆர்வலர்கள்
வாதிட்டாலும், மறு பக்கம் எவராலும் ஐ.பி.எல்லின் புகழையும், மகத்துவத்தையும்
மறுக்க முடியாது. இத்தொடரின் பன்னிரெண்டாம் பதிப்பின் முதல் போட்டியில் கடந்த
சனிக்கிழமையன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மண்ணில்
முதல் வெற்றியை ருசித்தது. இம்முறை ஐபிஎல் திருவிழாவானது இந்தியா முழுவதும்
பல்வேறு மைதானங்களில், 60 போட்டிகளைக்
கொண்ட தொடராக நடைபெறுகிறது. இந்தாண்டு ஏழு கட்டமாக ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றதேர்தல்
நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல்லில்
பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் போட்டிகளை விளையாட
திறம்பட வழிவகை செய்துள்ளது. சிக்ஸர் மழை, ரன்னில்லா பந்துகள் மற்றும் கட்டுக்கடங்கா
ரசிகர்களுடன், இந்தாண்டு ஐ.பி.எல் மற்றொரு பெரிய சவாலையும் எதிர்கொள்ள
வேண்டியுள்ளது. மே 12-ஆம் தேதி ஐ.பி.எல்
போட்டிகள் நிறைவடைந்தவுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மிகப்பெரிய
போட்டிக்காக விளையாட்டு வீரர்கள் ஆயத்தமாக வேண்டியுள்ளது. மே 30-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கும் உலகக்கோப்பை
கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள்
பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்க
அணியுடன் ஜூன் 5-ஆம் தேதி மோதுகிறது. ஆனால், இதற்காக முழுவதும் தயாராக இந்திய
அணிக்கு போதிய கால அவகாசம் இல்லை.
Comments
Post a Comment