2018 இல் துவங்கப்பட்ட மக்கள் நீதி மையத்தின் அரசியல் நிலைப்பாடும் அதன் நிறுவனர் உலக நாயகன்- கமல் ஹாசனின் அரசியல் வியூகம் என்னவாக இருக்கும் என்பதையும் இப்பொழுது காணலாம்:
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடம் பட்சத்தில், ஆளும் அ.தி.மு.க விற்கும், பிரதான எதிர் கட்சியான தி.மு.க. விற்கும் எதிரான கணிசமான வாக்குகளை கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் பெறலாம். எனினும், இவ்வாக்கு வங்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பட்சத்தில் குறையும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் தனித்து போட்டியிடும் மற்றும் பல கட்சிகளான தே.மு.தி.க, பா.ம.க, நாம் தமிழர் போன்ற கட்சிகளால் மேலும் குறையும் என்பதால், கமல் ஹாசன் தனித்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் நிகழாது என்பதே நிதர்சன உண்மை!
அல்லது, சமீப அரசியல் நிகழ்வுகளின் படி நடிகர் கமல், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பாரேயானால், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆளும் அதிமுகவின் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை முழுமையாய் பயன்படுத்தி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அவ்வாறும் அன்றி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து சட்டமன்ற தேர்தலில் இப்பொழுது முதலே கவனம் செலுத்தி தனித்து போட்டியிட விரும்பினால் அது 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் அடைந்த வெற்றி போல் அமையுமா என்பதும் சந்தேகமே. அவ்வாறே வெற்றி பெற்றாலும், அது தே.மு.க அடைந்த வெற்றி போல் குறுகிய காலமே நிலைக்கும்.
ஒருவேளை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்களின் அதிருப்திக்கு பெரிதும் ஆளாகியுள்ள பிஜேபி-அதிமுக கூட்டணியுடன் சேரும் பட்சத்தில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கமல்ஹாசன் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சேருவதில் என்ன தவறு? அத்தகைய சூழலில் கமலின் அரசியல் வியூகம் தமிழக அரசியல் களத்தில் எடுபடுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
Comments
Post a Comment