ஆண்களுக்கான இருக்கைகள் பேருந்துகளின் கூரையில் ஒதுக்கப்படும் – உச்சநீதிமன்றம்!
சென்னை, செப்டம்பர் 8, 2016:
சமீபத்தில் சென்னை மாநகர பேருந்தான 56C பேருந்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர வாசியான திரு. அப்பாவி அப்பு அவர்கள், பேருந்தின் ஆண்கள் பக்க இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்கள் கூட்டத்தை விரட்டியதே இச்சம்பவத்தின் சாராம்சம். அப்பு அவர்கள் இருக்கையை பெற்று ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்தின் உரிமையை நிலை நாட்டிய போதும், அவர் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால் அவரை சிறிது நேரத்திற்குள் ஒட்டு மொத்த பேருந்து பயணிகளும் சேர்ந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்!
இது ஆணுரிமைக்கு போரிட வேண்டிய காலம்!
இச்சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நம் அப்பாவி அப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கினை தாக்கல் செய்தார்! இது அப்புவின் வழக்கறிஞர் கூறுகையில் இவ்வழக்கில் வெற்றி பெறுவதன் மூலம் ஆண்களுக்கு பெண்களுக்கு இணையான உரிமையை வீட்டில் இல்லாவிட்டாலும் பேருந்துகளிலாவது ஏற்படுத்தி தர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்!
அனல் பறக்க நடந்த விவாதம்:
வழக்கின் விசாரணையின் போது அரசு வழக்கறிஞர், சென்னை மாநகர பேருந்துகளில் ஆண்களுக்கு என்று தனியாக சீட்டுகள் ஒதுக்கப்படுவது இல்லை என்றும் அவை பொது இருக்கைகள் மட்டுமே என்றும் அவற்றை பெண்களே தாராள மனப்பான்மையோடு இவ்வளவு காலங்களாக விட்டுக்கொடுத்து வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு 33% உரிமை எங்கும் நிறைவேற்றப்படும் நிலையில் அவர்களுக்கு பேருந்துகளில் 100% இருக்கைகள் ஒதுக்குவதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்!
இதற்கு பதிலளிக்கும் வகையாக அப்புவின் வழக்கறிஞர், தனது கட்சிகாரரான அப்பு இரண்டு கல்லூரி மாணவிகளையே இடத்திலிருந்து எழுப்பினார் என்றும், மேலும் அச்சமயத்தில் பெண்கள் பகுதியில் காலி இருக்கைகள் இருந்தன என்றும் கூறினார். மேலும் அவர் அவ்விரு பெண்களும் புரளி பேசுவதற்காக அருகருகே அமரவே ஆண்கள் பகுதியில் வந்து அமர்ந்ததாய் குற்றம் சாடினார். மேலும் IT போன்ற துறைகளின் வருகையால் பெருகி வரும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையே இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணமாவதாக சொன்னார்.
உச்ச நீதிமன்றத்தின் உச்ச க(கெ)ட்ட தீர்ப்பு!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றத்தின் பெண்கள் அமர்வு (பாவம் ஆண் நீதிபதிகளுக்கு அங்கும் இடமில்லை போல), அனைத்து மாநில அரசுகளையும் அவர்கள் இயக்கம் பேருந்துகளின் மேற்கூரைகளில் ஆண்களுக்கான கோணிப்பை விரித்த சொகுசு இருக்கைகளை ஒதுக்க உத்தரவிட்டது. இத்தீர்ப்பைக் கேட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்ததுடன் பெண்களுக்கு கூரைகளிலும் அமர இடம் ஒதுக்க வேண்டும் என கோர்ட் வாசலில் தர்ணா செய்தனர். மேலும் ஒரு பெண்கள் அமைப்பின் தலைவி, தான் ஆண் போல வேடமணிந்தோ அல்லது பம்பாய்க்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியோ அத்தகைய இருக்கைகளையும் பிடிப்பேன் என சபதம் எடுத்தார். அதே போல் ஒரு கல்லூரி பெண்கள் கூட்டம், தங்கள் துப்பட்டாக்களை பேருந்து கூரைகளின் மீது வீசி அங்கு அப்பாவியாய் அமர்ந்து இருந்த ஆண்களை எழுப்பி அமர முற்பட்டனர்!!!
படம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்யும் அப்பாவி ஆண்கள்!
மீண்டும் வருகிறான் சிலந்தி மனிதன்!
இத்தீர்ப்பை நடைமுறை படுத்துவதில் உள்ள பல்வேறு சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டதில் பேருந்துகளின் உள்ளேயும், மேலேயும் டிக்கெட் தர கூடிய நடத்துனர் கிடைப்பது சிரமம் என தெரிய வந்தது. எனவே இப்பணிக்கு ஹாலிவுட் படப் புகழ் “சிலந்தி மனிதன்” அழைக்கப்படலாம் என தெரிய வருகிறது. ஒரே ஒரு சிலந்தி மனிதனே உள்ளதால் க்ளோனிங் முறையில் பல சிலந்தி மனிதர்களை உருவாக்கலாமா? எனவும் ஆராயப்படுகிறது! சென்னை போக்குவரத்து கழகத்தின் ஒரு மூத்த நிர்வாகி வேண்டுமென்றால் மேற்கூரையில் டிக்கெட் கொடுக்க ஒரு சிறப்பு பெண் நடத்துனரை பணியமர்த்தினால் MTC இன் வருமானமும் பெருக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். நம்மூர் ஜன நெருக்கடியில் சிலந்தி மனிதன் நடத்துனராக வந்தார் உயிர் பிழைப்பாரா? என்பது சந்தேகமே!
அப்பாவி அப்புவின் மறு பக்கம்!
நீங்கள் எல்லாம் நினைப்பது போல் நம் அப்பு ஒன்றும் அவ்வளவு கெட்டவர் அல்ல. சமீபத்தில் கால் உடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த போது அவர் பெண்கள் பக்க இருக்கையில் அமர்ந்ததற்காக சீட்டை விட்டு எழுந்திரிக்கும் படி செய்ததே அப்புவின் இச்செயலுக்கு காரணமாகும். மேலும் இது குறித்து அப்பு கூறுகையில் தான் மேலும் உச்ச நீதிமன்றத்தில் சென்னை மாநகர ஷேர் ஆட்டோக்களில் ஆண்கள் முன் சீட்டில் டிரைவருடன் தொங்கியபடி அமர வைப்பதற்காக மற்றொரு வழக்கினை தொடுத்துள்ளதாக தெரிவித்தார்!
ஆதலால் ஆண்கள் சமுதாயமே உங்களுக்கு நாங்கள் கூறி கொள்வது ஒன்று தான்! நீங்கள் மறந்தும் பெண்கள் பக்க இருக்கைகளில் சென்னையிலோ, ஏன் இந்தியாவிலோ, அல்லது உலகில் எந்த மூலையிலோ உட்கார முற்படாதீர்கள். ஏனெனில் நாம் காட்டுவது போன்ற கரிசனத்தை பெண்கள் நமக்கு காட்டுவது சந்தேகமே!
Comments
Post a Comment